‘லிப்ட்’ கேட்டு சென்ற வாலிபர் பலி

ஆண்டிப்பட்டி அருகே மரத்தில் கார் மோதியதில் லிப்ட் கேட்டு சென்ற வாலிபர் ஒருவர் பலியாகினார்.

Update: 2021-07-09 16:17 GMT
ஆண்டிப்பட்டி: 

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியை சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் ராஜா (வயது 38). இவர் தனது மகன் நிரஞ்சன் காதணி விழாவுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்கு திருப்பூரில் இருந்து தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டுக்கு ஒரு காரில் நேற்று வந்தார். அவருடன் மகன் நிரஞ்சன்(13) வந்தான். 

காரை அவரது உறவினர் காங்கேயம் புஷ்பா நகரை சேர்ந்த குமரவேல் (31) ஓட்டினார். கடமலைக்குண்டுவில் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு மீண்டும் திருப்பூருக்கு புறப்பட்டார். 

அப்போது கட மலைக்குண்டுவில் புறப்பட்டு வந்தபோது, தர்மராஜபுரம் கிராமத்தை சேர்ந்த சென்றாயன் என்பவரின் மகன் குமார் (30) திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இறக்கிவிடுமாறு ‘லிப்ட்’ கேட்டு காரில் ஏறினார். 

அந்த கார் வைகை அணை சாலையில் கரட்டுப்பட்டி கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த பனைமரத்தின் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த ராஜா, நிரஞ்சன், குமரவேல் மற்றும் குமார் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 

அப்போது குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். 

இந்த விபத்து குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடமலைக்குண்டு பகுதி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

மேலும் செய்திகள்