ரெட்டியார்சத்திரம் அருகே சாலையோரம் கழிவுகளை கொட்டிய குப்பை வண்டி சிறைபிடிப்பு

ரெட்டியார்சத்திரம் அருகே சாலையோரம் கழிவுகளை கொட்டிய குப்பை வண்டியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

Update: 2021-07-09 14:29 GMT
கன்னிவாடி:
ரெட்டியார்சத்திரம் அருகே பழக்கனூத்துவில் உள்ள திண்டுக்கல்-பழனி நெடுஞ்சாலை ஓரம் மக்கும், மக்காத குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சி கழிவுகளை மர்மநபர்கள் கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
இந்தநிலையில் நேற்று அதிகாலை ஒட்டன்சத்திரம் நகராட்சி குப்பை வண்டி ஒன்று, பழக்கனூத்துவில் உள்ள சாலையோரம் கழிவுகளை கொட்டி கொண்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், அந்த குப்பை வண்டியை சிறைபிடித்தனர். மேலும் இதுதொடர்பாக பழக்கனூத்து ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி ராமசாமி, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய கவுன்சிலர் விவேகானந்தன், ஊராட்சி செயலாளர் லிங்குசாமி ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், குப்பை வண்டியை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரித்தனர். பின்னர் அந்த வண்டியை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் ஒன்றிய கவுன்சிலர் விவேகானந்தன் ெதரிவித்தார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்