கிராம நிர்வாக அதிகாரியின் பிறந்த நாளை ‘கேக்’ வெட்டி கொண்டாடிய பொதுமக்கள்

லஞ்சம் கேட்காமல் உரிய நேரத்தில் சான்றிதழ் வழங்கும் கிராம நிர்வாக அதிகாரியின் பிறந்த நாளை பொதுமக்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாடினர். அப்போது பெண்கள் கும்மி பாடல் பாடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து நெகிழ வைத்தனர். தஞ்சை அருகே நேர்மைக்கு கிடைத்த இனிப்பு பரிசாக இந்த கொண்டாட்டம் அமைந்தது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

Update: 2021-07-09 13:53 GMT
வல்லம்,

தஞ்சை அருகே உள்ள வல்லம் புதூர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் செந்தில்குமார்(வயது 46).இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை காமராஜர்புரம். இவரது மனைவி கோகிலா, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை அடுத்த அரியணிப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு பிளஸ்-2 படிக்கும் நிவேதா என்ற மகளும், 7-ம் வகுப்பு படிக்கும் அரவிந்த் என்ற மகனும் உள்ளனர்.

இந்திய கடற்படையில் 20 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற செந்தில்குமார், பணி ஓய்வுக்கு பின்னர் வெறுமனே ‘ஓய்வெடுக்காமல்’ மக்கள் சேவையாற்ற நினைத்து கிராம நிர்வாக அதிகாரிக்கான தேர்வு எழுதி பணியில் சேர்ந்தார்.

கடந்த 6 ஆண்டுகளாக கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் இவர், பாரபட்சமின்றி அனைவருக்கும் தேவையான சான்றிதழ்களை லஞ்சம் கேட்காமல் உரிய நேரத்தில் வழங்கி வருவதாக இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வரும் பகுதி கிராம மக்கள் தெரிவித்தனர். கிராம மக்களிடம் எளிதில் பழகுவது, மக்களை அலைக்கழிக்காமல் அவர்களுக்கு வேண்டிய சேவைகளை வழங்குவது என நேர்மையான செயல்பாடுகளால் மக்களை கவர்ந்து வருகிறார் செந்தில்குமார்.

கஜா புயல், கொரோனா என எந்த இடர் வந்தாலும் நிவாரண பொருட்களை தேவையானவர்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் வழங்கி உள்ளார். தொடர்ந்து மக்கள் சேவை செய்து வரும் இவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். முன்பு இவர், தஞ்சை அருகே உள்ள விளார் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். தற்போது இவர், வல்லம்புதூர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

நேர்மையாகவும் அதே நேரத்தில் சேவை மனப்பான்மையுடனும் அரசு பணியாற்றி வரும் செந்தில்குமாருக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள். இதை தெரிந்து கொண்ட வல்லம்புதூர் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட குருவாடிப்பட்டி கிராம மக்கள் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர்.

அதன்படி அவருடைய பிறந்த நாளான நேற்று முன்தினம் குருவாடிப்பட்டி கிராம மக்கள் ‘கேக்’ வெட்டி நேர்மைக்கான ‘இனிப்பு’ பரிசாக அவருக்கு ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவருக்கு நினைவு பரிசையும் வழங்கினர்.

செந்தில்குமார் இந்த பகுதிக்கு பணிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்ததன் கொண்டாட்டமாகவும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் அமைந்தது. அப்போது பெண்கள் கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கும்மி பாடல் பாடியது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.

இதுகுறித்து குருவாடிப்பட்டி மாதாகோவில் தெருவை சேர்ந்த லெனின் கூறும்போது, எங்களுடைய கிராமத்தில் எத்தனையோ கிராம நிர்வாக அதிகாரிகள் இதற்கு முன்பு பணியாற்றி உள்ளனர். ஆனால் இவரைப் போன்று(செந்தில்குமார்) நேர்மையான, முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியவரை எங்கள் கிராம மக்கள் பார்த்ததே இல்லை. கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து கொடுத்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில் அரிசி, மளிகை பொருட்களை தனது சொந்த செலவில் வழங்கினார். எங்கள் கிராமத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனை பட்டாவும், ஏராளமான முதியோர்கள், விதவைகளுக்கு உதவித்தொகையும் பெற்று தந்துள்ளார். முதியோருக்கு தன்னுடைய சொந்த செலவில் மாதந்தோறும் அரிசி வாங்கி கொடுப்பதையும் பழக்கமாக கொண்டுள்ளார்.

இப்படி எங்களில் ஒருவராக இருக்கும் கிராம நிர்வாக அதிகாரியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினோம். அவருடைய நேர்மையை சிறப்பிக்கும் விதமாக கிராமத்தில் மரக்கன்றுகளையும் நட்டுள்ளோம். பெண்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் பரிசு பொருட்களை கொடுத்தும், கும்மியடித்தும் வாழ்த்தினர் என்றார்.

கிராம மக்கள் தெரிவித்த வாழ்த்து குறித்து கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், ‘ஏழை, எளிய பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன். நான் கடற்படையில் 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று இந்த பணியில் சேர்ந்துள்ளேன். ஏற்கனவே விளார் கிராமத்தில் பணியாற்றியபோது அங்கு 500 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவை வாங்கி கொடுத்தேன். தற்போது இந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறேன். இந்த கிராம மக்கள் எனது பிறந்தநாளை கொண்டாடியது எனக்கு மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது’ என்றார்.

நேர்மையான கிராம நிர்வாக அதிகாரிக்கு குருவாடிப்பட்டி கிராம மக்களுடன் நாமும் நமது உளப்பூர்வமான வாழ்த்தை தெரிவித்தோம்.

மேலும் செய்திகள்