தூய்மை பணியை 3-வது முறையாக தடுத்து நிறுத்திய பொதுமக்கள் - பேச்சுவார்த்தையில் உடன்பாடு
மயிலாடுதுறையில், புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டப்படும் இடத்தில் நடந்த தூய்மை பணியை 3-வது முறையாக பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இதை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.;
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் தற்காலிகமாக வணிகவரித்துறை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. புதிதாக கலெக்டர் அலுவலகம் கட்ட மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில் மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் 21 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான இந்த இடத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்ட ஆதீனம் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்ட முடிவு செய்து புதிய கட்டிடம் கட்டுவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான டெண்டர் அறிவிப்பும் கடந்த 11-ந் தேதி தமிழக அரசு வெளியிட்டது.
இந்த நிலையில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்காக இடம் தூய்மை செய்யும் பணி கடந்த 31-ந்தேதி தொடங்கியது. அப்போது அந்த பகுதி மக்கள் தாங்கள் விவசாயம் செய்து வரும் இடம் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானதாக இருந்தாலும், அதில் 200 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவதாகவும் எனவே எந்தவித இழப்பீடும் வழங்காமல் நிலத்தை கையகப்படுத்த கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப்படுத்தும் பணியை தடுத்து நிறுத்தினர்.
மீண்டும் கடந்த 1-ந் தேதி இடம் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. அப்போதும் பொதுமக்கள் தூய்மைப்படுத்தும் பணியை தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில் 3-வது முறையாக நேற்று மீண்டும் பொக்லின். எந்திரம் மூலம் இடம் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. அப்போது அந்த பகுதி பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், தாசில்தார் ராகவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் வீட்டின் அருகில் அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள இடத்தை தற்போது சுத்தம் செய்யப்போவதில்லை என்றும், தருமபுர ஆதீனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியில் மட்டுமே இடம் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ள உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் ஆதீனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியில் மட்டும் தூய்மை பணி நடைபெற்றது.