தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை2½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், முதல் டோஸ் போட்டவர்களுக்கு 2-வது டோஸ் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

Update: 2021-07-09 12:17 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை2½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், முதல் டோஸ் போட்டவர்களுக்கு 2-வது டோஸ் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தொற்று குறைந்து வருகிறது
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை படிப்படியாக குறைந்து தற்போது தொற்றின் அளவு குறைந்து உள்ளது. மக்களின் ஒத்துழைப்பு காரணமாகத்தான் தொற்றின் அளவை விரைவில் குறைக்க முடிந்தது. இன்னும் முழுமையாக நாம் கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்பதால் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பல்வேறு நாடுகளில் நியுட்டன் வகை வைரஸ் பரவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில்தான் பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 2-வது அலையின்போது மக்கள் பங்களிப்பு மட்டுமின்றி பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மூலம் அதிக அளவிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. இது மருத்துவ சிகிச்சைக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். 
40 ஆயிரம் பரிசோதனைகள்
தூத்துக்குடியில் உள்ள நுண்ணுயிரியல் துறை ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வகத்தில் 5 லட்சத்து 40 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் அதிகமாக இருந்த போது தினமும் 4 ஆயிரம் பரிசோதனைகள் வரை செய்து சாதனை படைக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைகள் அனைத்தும் அரசு ஆஸ்பத்திரி மூலமே மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் தொடர்ந்து முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கைகளை கழுவ வேண்டும். பொது வெளியில் செல்லும்போது பாதுகாப்புடன் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
2½லட்சம் தடுப்பூசி
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2½ லட்சம் பேருக்கு  தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. தடுப்பூசிகள் அனைவரும் போட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து தடுப்பூசி வரவர தொடர்ந்து போடப்பட்டு வருகிறது. முதல் தவணை ஊசி போட்டவர்களுக்கு 2-வது தவணை ஊசி, அவர்கள் ஏற்கனவே போட்ட பகுதிக்கு சென்று போடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்