பட்டினப்பாக்கத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து செயல்படும் ஓட்டல்கள்

சென்னை பட்டினப்பாக்கத்தில் கடற்கரை சாலையோர நடைபாதையை குடியிருப்புவாசிகள் ஆக்கிரமித்து ஓட்டல்கள் அமைத்துள்ளனர். வாகனங்கள் நிறுத்துமிடமாகவும் பயன்படுத்துகிறார்கள். இதனால் சிங்கார சென்னையாக மாற்ற கொண்டுவரப்பட்ட திட்டம் பாழாகி கிடக்கிறது.

Update: 2021-07-09 05:26 GMT
சென்னை,

உலகின் 2-வது நீளமான கடற்கரை எனும் சிறப்பை பெற்றது, சென்னை மெரினா கடற்கரை. 13 கி.மீ. நீளம் கொண்ட இந்த கடற்கரை சென்னையின் தனித்துவ அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. சென்னை என்றாலே மெரினா எனும் அளவுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மக்கள் மனதில் முத்திரை பதித்துள்ளது. சென்னையை சுற்றி பார்க்க வரும் வெளிநாட்டவர் காலடித்தடம் மெரினா மணற்பரப்பில் பதியாமல் போனதாக வரலாறே இல்லை. அந்தளவு மெரினாவின் புகழ் நிலைத்து நிற்கிறது.

ஆனால் சிங்கார சென்னையின் முக்கிய அடையாளமாக விளங்கும் மெரினா கடற்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் போக்கு, அந்த புகழை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து கொண்டிருக்கிறதோ....? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகள் சூழ்ந்துள்ள மெரினா கடற்கரை பகுதி, தற்போது பாதசாரிகளின் குற்றச்சாட்டையும் பெற்று பரிதாபமாக காட்சியளித்து கொண்டிருக்கிறது.

பட்டினப்பாக்கம் லூப் சாலை

சென்னையை சிங்கார சென்னையாக மாற்றும் முனைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு திட்டங்களில் தமிழக அரசுடன், பெருநகர சென்னை மாநகராட்சி கைகோர்த்தது. ‘ஸ்மார்ட் சிட்டி’ போன்ற திட்டங்களும் அமல்படுத்தப்பட்டன. இதன் ஒரு கட்டமாக எழில்மிகு மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கடைகளை முறைப்படுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் என பலதரப்பட்ட கருத்துகள் மீனவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் வந்தன. இதுதொடர்பான வழக்குகளும் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.

இதன் ஒரு கட்டமாக கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை, நொச்சிக்குப்பம் பகுதியை ஒட்டியுள்ள லூப் சாலையில் நடைபாதை அமைக்கும் பணி செயல்படுத்தப்பட்டது. மெரினா காமராஜர் சாலையில் போடப்பட்டிருக்கும் நடைபாதை போலவே தரமான கிரானைட் கற்கள் பதித்து, துருப்பிடிக்காத இரும்பு கொண்டு, 2 அடிக்கும் மேலான தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதனால் மெரினா வழியாக பட்டினப்பாக்கம் செல்லும் பகுதியில் முன்பு இருந்த அலங்கோல நிலை மாற தொடங்கியது. பாதசாரிகளும் உற்சாக நடைபோட தொடங்கினர்.

நடைபாதையை ஆக்கிரமித்து ஓட்டல்கள்

ஆனால் என்ன ஆனதோ... யார் கண் பட்டதோ தெரியவில்லை. இந்த நடைபாதை இப்போது இருக்கும் சுவடே தெரியாமல் போயிருக்கிறது. குறிப்பாக நொச்சிக்குப்பம் குடியிருப்பு அமைந்திருக்கும் பகுதியில் இருந்து சீனிவாசபுரம் வரையிலான நடைபாதை தடம் தெரியாமல் மாறி இருக்கிறது. நடைபாதை தடுப்பு கம்பிகள் பல இடங்களில் காணவில்லை.

பாதசாரிகள் நடக்க வேண்டிய நடைபாதையில் சிற்றுண்டி வாகனங்கள், சைக்கிள்கள், மிதிவண்டிகள் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. வீட்டு வாசலில் இருந்து தார்ப்பாய்களை நடைபாதைகள் வரை கட்டி அப்பகுதி பெண்கள் துணிகள் துவைத்து வருகிறார்கள். துவைக்கப்படும் துணிகள் நடைபாதையிலேயே கயிறுகள் கட்டி காயவைக்கப்படுகிறது. இதுதவிர ஏராளமான மீன் வலைகள், பழைய மற்றும் உபயோகப்படுத்தப்படாத வீட்டு உபயோக பொருட்கள், உடைந்த வாகன உதிரி பாகங்கள் என ஏதோ பழைய சாமான்கள் விற்பனை செய்யும் கடைகள் போலவே அப்பகுதி காட்சி தருகிறது. இதெல்லாம் போதாதென்று நடைபாதைகளை ஆக்கிரமித்து ஓட்டல்களும் முளைத்துள்ளன. இதில் விசேஷம் என்னவென்றால் நடைபாதைகளில் தடுப்புகள் அமைத்து ஆவி பறக்க சமையல் பரிமாறப்படுவது தான்.

அத்துமீறலா....?

கடற்கரை மணற்பரப்பில் கடைகள் அமைக்கவே ஆயிரம் நிபந்தனைகளை விதிக்கும் மாநகராட்சி நிர்வாகம் கண்ணில் இந்த காட்சி படாதது ஏனோ...? என்ற வியப்பு அப்பகுதிக்கு செல்வோர் மனதில் நிச்சயம் எழும். நடைபாதையில் தார்ப்பாய்கள் போட்டு, மேஜை, நாற்காலி சகிதமாக சுடச்சுட உணவு பரிமாறப்படுகிறது. போதாத குறைக்கு கடைகளுக்கு முன்பு வாகனங்களும் அணிவகுத்து நிறுத்தப்படுகிறது. விதிகளை மீறி இப்படி கடைகள் அமைக்கிறோமே... என்ற எண்ணம் கடைக்காரர்களுக்கு இருப்பதாகவே தெரியவில்லை. இதனால் சிங்கார சென்னையாக மாற்ற கொண்டுவரப்பட்ட திட்டம் பாழாகி கிடக்கிறது.

‘‘எல்லாவற்றுக்கும் மேலாக அந்த பகுதியில் சுற்றி சுற்றி வரும் ரோந்து போலீசார் கூட அந்த கடைகளில் தான் உணவு பார்சல் வாங்கி செல்கிறார்கள். வாடிக்கையாளர்களை விட போலீசாரை நன்றாகவே கடைக்காரர்கள் கவனிக்கிறார்கள்’’ என்று கடற்கரைக்கு அடிக்கடி உலா வருவோர் தெரிவிக்கிறார்கள். நடைபாதை நடப்பதற்கே என்ற விதிகளை மீறி சொந்த காரணங்களுக்கு நடைபாதைகளை ஆக்கிரமித்து சிலர் செயல்படுவது அவர்களின் அஜாக்கிரதையா...? அலட்சியமா...? அத்துமீறலா....?என்பது புரியவில்லை. ஆனால் இதையெல்லாம் கண்டும் காணாதது போல மாநகராட்சி நிர்வாகம் எப்படி செயல்பட முடிகிறது? என்பதே பொதுமக்கள் கேள்வியாக இருக்கிறது.

மேலும் செய்திகள்