கோபி அருகே இரவு நேரங்களில் ஆடுகளை திருடும் மர்ம நபர்கள்- கண்காணிப்பு கேமராவில் சிக்கிய 2 பேருக்கு வலைவீச்சு
கோபி அருகே இரவு நேரங்களில் ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்செல்லும் சம்பவங்கள் நடந்து வருகிறது. கண்காணிப்பு கேமராவில் சிக்கிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;
கடத்தூர்
கோபி அருகே இரவு நேரங்களில் ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்செல்லும் சம்பவங்கள் நடந்து வருகிறது. கண்காணிப்பு கேமராவில் சிக்கிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஆடு திருட்டு
கோபியை அடுத்து உள்ள பொலவக்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் இந்திராணி. இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். மேலும் இவர் ஆடு மற்றும் மாடுகளை தனது வீடு முன்பு கட்டி வளர்த்து வருகிறார். இதில் கோவிலுக்கு நேர்த்திக்கடனுக்காக 4 ஆண்டுகளாக ஆடு ஒன்றையும் கட்டி வைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் இந்திராணி வீட்டின் வாசலில் நேர்த்திக்கடனுக்காக கட்டப்பட்டு இருந்த ஆட்டை திருட முயன்றனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவு
இதை பார்த்த அவரது வீட்டு நாய் மர்மநபர்களை நோக்கி குரைக்க தொடங்கியது. இதனால் மர்ம நபர்கள் நாய்க்கு எலும்பு துண்டு ஒன்றை போட்டு விட்டு, ஆட்டை திருடிக்கொண்டு சென்றனர். இதற்கிடையில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு இந்திராணி வெளியே வந்து பார்த்தார்.
அப்போது ஆட்டை மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து நேற்று காலையில் அவர் இதுபற்றி அக்கம் பக்கத்தினரிடம் கூறினார். இதனால் அவர்கள் அருகில் இருந்த கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
அப்போது அதில் 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அந்த பகுதிக்கு வருவதும், ஒருவன் மோட்டார் சைக்கிளில் தயாராக இருக்க, மற்றொருவன் ஆட்டை திருடுவதும், பின்னர் மோட்டார் சைக்கிளில் ஆட்டை வைத்துக் கொண்டு 2 பேரும் தப்பித்து செல்வதுமான காட்சிகள் பதிவாகி இருந்தது. இதேபோல் அதே பகுதியில் கடந்த வாரத்தில் வேலுச்சாமி என்பவர் உள்பட 2 பேருக்கு சொந்தமான 4 வெள்ளாடுகள் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இந்திராணி கோபி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்கள் 2 பேரை வலை வீசி தேடி வருகிறார்கள். தொடர்ந்து அந்த பகுதியில் ஆடுகள் திருட்டு போனதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். மேலும் ஆடுகள் திருடும் கும்பலை போலீசார் விரைவில் பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.