கருப்பூர் சுங்கச்சாவடி அருகே விபத்து: சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலி- மனைவி படுகாயம்
கருப்பூர் சுங்கச்சாவடி அருகே சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். மனைவி படுகாயம் அடைந்தார்.
கருப்பூர்:
கருப்பூர் சுங்கச்சாவடி அருகே சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். மனைவி படுகாயம் அடைந்தார்.
கணவன்-மனைவி
ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 51). இவருடைய மனைவி அலமேலு (45). இவர்கள் 2 பேரும் நேற்று காலை சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
வழியில் கருப்பூர் சுங்கச்சாவடி அருகே மோட்டார் சைக்கிள் சென்றபோது, சாலை தடுப்புச்சுவரில் மோதியது. இதில் நிலைத்தடுமாறி பழனியப்பன், அலமேலு ஆகியோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பலி
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மாலை பழனியப்பன் பரிதாபமாக இறந்தார். அலமேலு கால் முறிந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து சூரமங்கலம் விபத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று பழனியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.