முதல்-மந்திரி பதவி போட்டியில் நானும் உள்ளேன்; பா.ஜனதா எம்.எல்.ஏ. பேட்டி
முதல்-மந்திரி பதவி போட்டியில் நானும் உள்ளேன் என்றும், எடியூரப்பாவின் பதவி காலம் எண்ணப்படுகிறது என்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
கொள்ளேகால்: முதல்-மந்திரி பதவி போட்டியில் நானும் உள்ளேன் என்றும், எடியூரப்பாவின் பதவி காலம் எண்ணப்படுகிறது என்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
பஞ்சமசாலி சமூகத்தை 2-ஏ பிரிவுக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்று கர்நாடகம் முழுவதும் அந்த சமூகத்தின் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தை பா.ஜனதாவை சோ்ந்த எம்.எல்.ஏ. பசனகவுடா பட்டீல் யத்னால் முன்னெடுத்து வருகிறார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அவர் பா.ஜனதா அரசை எதிர்த்து போராடி வருகிறாா். மேலும் அவர் அடிக்கடி முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராகவும் பேசி வருகிறார்.
இந்த நிலையில் பஞ்சமசாலி சமூகத்தினரின் ஆலோசனை கூட்டம் சாம்ராஜ்நகரில் நடந்தது. இதில் பசனகவுடா பட்டீல் யத்னால் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
சாம்ராஜ்நகர் வர பயப்படுகிறார்
கர்நாடகத்தில் எடியூரப்பாவின் பதவி காலம் எண்ணப்படுகிறது. பா.ஜனதாவில் முதல்-மந்திரி பதவியை எதிர்பார்த்து பலர் காத்து கொண்டுள்ளனர். அந்த போட்டியில் நானும் உள்ளேன். சாம்ராஜ்நகருக்கு வந்தால் முதல்-மந்திரி பதவி பறிபோகும் என்ற பயத்தில், எடியூரப்பா சாம்ராஜ்நகருக்கு வர பயப்படுகிறார்.
ஆனால் சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, இங்கு அடிக்கடி வந்து சென்றார். ஆனால் அவர் பதவி பறிபோகவில்லை. 5 ஆண்டுகளும் அவரே ஆட்சி செய்தார்.
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி காலம் இன்னும் 2 ஆண்டுகள் உள்ளது. இந்த 2 ஆண்டுகளும் எடியூரப்பா முதல்-மந்திரியாக இருக்க மாட்டார். அதற்குள் அவர் மாற்றப்படுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
முற்றுகை
பசனகவுடா பட்டீல் யத்னால், தொடர்ந்து முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக பேசி வருவதால், அவர் மீது எடியூரப்பா ஆதரவாளர்கள் ஆத்திரத்தில் உள்ளனர். இந்த நிலையில் சாம்ராஜ்நகருக்கு வந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.