பெங்களுருவில் 31 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது

ரேகா கதிரேஷ் உள்பட 4 பேர் கொலையானதை தொடர்ந்து பெங்களூருவில் 31 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கூறியுள்ளார்.

Update: 2021-07-08 21:01 GMT
பெங்களூரு: ரேகா கதிரேஷ் உள்பட 4 பேர் கொலையானதை தொடர்ந்து பெங்களூருவில் 31 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கூறியுள்ளார்.

15 நாட்களில் 4 கொலைகள்

பெங்களூருவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டதும் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. கடந்த 15 நாட்களில் பெங்களூருவில் 4 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஜூன் மாதம் 22-ந் தேதி நிழல் உலக தாதா ரஷித் மலபரியின் கூட்டாளி கரீம் அலி கொலை செய்யப்பட்டார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெங்களூரு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ரேகா கதிரேஷ் தனது அலுவலகம் அருகே கொலை செய்யப்பட்டு இருந்தார்.

பனசங்கரி கோவில் அருகே நிதி நிறுவன உரிமையாளர் மதனும், காவல்பைரசந்திராவில் கிருஷ்ணமூர்த்தி என்பவரும் கொலை செய்யப்பட்டார்கள். 

இந்த கொலை சம்பவங்கள் குறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில் கூறியதாவது:-

31 ரவுடிகள் கைது

பெங்களூருவில் கடந்த 15 நாட்களில் 4 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளார்கள். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பொதுமக்களின் பயத்தை போக்கும் வகையில் பெங்களூருவில் 31 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவ்வளவு எண்ணிக்கையில் ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைதாவது இதுவே முதல் முறையாகும். பொதுமக்கள் நிம்மதியுடன் வாழ வேண்டும் என்பதே எனது குறிக்கோள். இதற்கான அனைத்து நடவடிக்கைகள், முயற்சிகளை மேற்கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்