பெட்ரோல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் பெட்ரோல்- டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்:
ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. இந்நிலையில், சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், தொழிற்சங்க அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பெரம்பலூரில் நேற்று 3 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அந்த பேரவையின் மாவட்ட கவுன்சில் தலைவர் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ரெங்கசாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தும் மத்திய அரசை கண்டித்தும், அதன் விலையை குறைக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள், 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள், சர்க்கரை ஆலை தொழிலாளர்கள், மின்வாரிய ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், ரேஷன் கடை ஊழியர்கள், கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பொருளாளர் வேணுகோபால் வரவேற்றார். முடிவில் துணை செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும்
கையெழுத்து இயக்கம்
இதேபோல் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெங்கடேசபுரத்தில் உள்ள பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன், கட்சியின் மீனவரணி தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் பெட்ரோல் மற்றும் டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப்பெறக்கோரி கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். இதேபோல் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இளைஞரணி மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார்.
மாதர் சங்கத்தினர் ஒப்பாரி போராட்டம்
சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இணைந்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாதர் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் கலையரசி, வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, விறகு அடுப்பில் சமையல் செய்யப்பட்டது. இதையடுத்து மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் மாலை அணிவிக்கப்பட்ட சிலிண்டரை சுற்றி வந்து கும்மி அடித்து, ஒப்பாரி பாடல் பாடினர். பின்னர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஒப்பாரி போராட்டத்தை பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.