ரவுடி கொலையில் கைதான 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பேட்டை அருகே ரவுடி கொலையில் கைதான 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2021-07-08 19:56 GMT
பேட்டை:
பேட்டை அருகே ரவுடி கொலையில் கைதான 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. 

ரவுடி கொலை

நெல்லை பேட்டையை அடுத்த கொண்டாநகரத்தை சேர்ந்தவர் அர்ஜூனன் மகன் மாரியப்பன் (வயது 34). ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் கடந்த மாதம் 22-ந் தேதி 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொண்டாநகரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த மாடசாமி மகன் பிரகாஷ் என்ற இசக்கி பாண்டியன் (21), நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த கண்ணப்பன் மகன் மணி என்ற இசக்கி பாண்டி (20), பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் பாண்டி என்ற இசக்கி பாண்டி (21), சிவன் கோவில் தெருவை சேர்ந்த செல்லப்பா மகன் மாரியப்பன் என்ற மாயாண்டி (31), கருப்பசாமி மகன் கணேசன் (36), லட்சுமணன் மகன் ஆறுமுகநயினார் (24), இசக்கி மகன் விக்கி என்ற வெங்கடசுப்ரமணியன் (23) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

குண்டர் சட்டம் 

இந்த நிலையில் அவர்கள் 7 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். 
இதற்கான உத்தரவு நகலை சுத்தமல்லி இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் வழங்கினார்.

மேலும் செய்திகள்