கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-08 19:53 GMT
பனவடலிசத்திரம்:
செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 
தேவர்குளம் அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கல்லூரி மாணவர் 

தேவர்குளம் அருகே உள்ள வெள்ளப்பனேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட முத்தையாபுரத்தை சேர்ந்தவர் மகாராஜன். விவசாயி. இவரது மகன் மூர்த்தி (வயது 19). இவர் கோவில்பட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்ற மூர்த்தி, வகுப்பு நேரம் முடிந்த பின்னரும் செல்போனில் தனது நண்பர்களுடன் வீடியோ காலில் பேசியும், வீடியோ கேம் விளையாடியும் வந்ததாக கூறப்படுகிறது. 

விஷம் குடித்து தற்கொலை

கடந்த மாதம் 23-ந்தேதி மூர்த்தி நீண்ட நேரம் கேம் விளையாடி உள்ளார். இதை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த மூர்த்தி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி மூர்த்தி பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து தேவர்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்