நகை வியாபாரி கொலையில் நண்பர் கைது
குருவிகுளம் அருகே நகை வியாபாரி கொலை வழக்கில் அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
திருவேங்கடம்:
குருவிகுளம் அருகே நகை வியாபாரி கொலை வழக்கில் அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
நகை வியாபாரி கொலை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருணாசலம் ஆசாரி தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). நகை பட்டறை உரிமையாளரான இவர், வங்கிகளில் ஏலத்துக்கு வரும் நகைகளை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார்.
இவர் கடந்த 5-ந்தேதி தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே மலையாங்குளம் கிராமத்தில் உள்ள குளத்தில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளியை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர்.
நண்பர் கைது
விசாரணையில், செந்தில்குமாரை கொலை செய்தது அவரது நண்பரான அருப்புக்கோட்டை அருகே நல்லான்குளத்தைச் சேர்ந்த செல்வகுமார் (21) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். கைதான செல்வகுமார் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-
வங்கிகளில் ஏலத்துக்கு வரும் நகைகளை செந்தில்குமார் வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தார். அவருக்கு உதவியாக நான் செயல்பட்டு வந்தேன். எனவே அவர் எனக்கு கமிஷன்தொகை கொடுத்து வந்தார். இதனால் நாங்கள் நண்பர்களாக பழகி வந்தோம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது செல்போனில் இருந்த மனைவியின் புகைப்படத்தை செந்தில்குமாரிடம் காண்பித்தேன். அப்போது எனது மனைவியின் உருவத்தைப் பார்த்து செந்தில்குமார் கேலி கிண்டல் செய்தார். இதனால் அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. எனவே அவரைக் கொலை செய்ய திட்டமிட்டேன்.
கோவிலுக்கு சென்றபோது...
அதன்படி சம்பவத்தன்று குருவிகுளம் அருகே மலையாங்குளம் கிராமத்தில் உள்ள எனது குல தெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட செல்வோம் என்று செந்தில்குமாரை அவரது காரில் அழைத்து வந்தேன். மலையாங்குளம் கிராமத்தில் உள்ள குளத்தின் அருகில் காரை நிறுத்தி விட்டு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டோம்.
பின்னர் குளத்தின் வழியாக திரும்பி வந்தபோது, நான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செந்தில்குமாரை சரமாரியாக வெட்டிக்ெகாலை செய்தேன்.
இவ்வாறு செல்வகுமார் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் செல்வகுமாரை சங்கரன்கோவில் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.