காவிரி ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் 5 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்பு
காவிரி ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் 5 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டார். இதையத்து அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
நொய்யல்
கல்லூரி மாணவர்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பழனியப்பா ஆயில் மில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் அரவிந்தன் (வயது 17). இவர் திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள ஆக்ஸ்போர்டு கேட்டரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 4-ந்தேதி தனது சித்தப்பா விவேக் (30), மாமா மகன் கவுதம் (17) ஆகிய 3 பேருடன் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப்பகுதிக்கு வந்து குளித்து கொண்டிருந்தனர். அப்போது அரவிந்தன் ஆழமான பகுதிக்கு சென்று குளித்து கொண்டிருந்தபோது மூழ்கினார். இதையடுத்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர் கடந்த 4-நாட்களாக காவிரி ஆற்றில் தேடியும் அரவிந்தனை காணடுப்பிடிக்க முடிய வில்லை.
பிணமாக மீட்பு
இந்நிலையில் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று காவிரி ஆற்றிற்கு குளிக்க வந்துள்ளார். அப்போது காவிரி ஆற்றின் குறுக்கே வாலிபர் ஒருவரது பிணம் மிதந்து கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகானந்த வடிவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது கடந்த 4 நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் மூழ்கிய அரவிந்தன் உடல் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அரவிந்தன் உறவினர்கள் வந்து உடலை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சை கரைய வைப்பதுபோல் இருந்தது. இதையடுத்து போலீசார் அரவிந்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 5 நாட்களுக்கு பிறகு கல்லூரி மாணவர் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.