வைக்கோல் படப்புக்கு தீவைப்பு
இட்டமொழி அருகே வைக்கோல் படப்புக்கு தீவைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
இட்டமொழி:
இட்டமொழி அருகே உள்ள விஜய அச்சம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 59), விவசாயி. விஜயஅச்சம்பாடு ஊருக்கு தெற்கு பகுதியில் இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. கடந்த 6-ந்் தேதி நள்ளிரவு இவரது தோட்டத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த வைக்கோல் படப்புகளுக்கு தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் 250 கட்டு வைக்கோல் எரிந்து நாசமானது. தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த 2 பசுமாடுகள் காயம் அடைந்தன.
இதன்பின்னர் மர்ம நபர்கள் இட்டமொழி இலங்கையாடிகுளம் இலங்குமணி சாஸ்தா கோவில் அருகே உள்ள கீழப்பண்டாரபுரத்தைச் சேர்ந்த சுடலை மனைவி சுப்புலட்சுமி (48) என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் படப்புக்கும் தீ வைத்தனர். இதில் 45 கட்டு வைக்கோல் எரிந்து நாசமானது.
தீ வைப்பு சம்பவம் குறித்து 2 பேரும் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து வைக்கோல் படப்புகளுக்கு தீ வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.