ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
பாளையங்கோட்டையில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.;
நெல்லை:
பாளையங்கோட்டையில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
ஆட்டோ கவிழ்ந்து விபத்து
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 42). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்து, தனது ஆட்டோவில் பழங்களை ஏற்றிக்கொண்டு, புதிய பஸ் நிலையம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். பாளையங்கோட்டை மேலகுலவணிகர்புரம் அருகே சென்றபோது ஆட்டோ திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த கருப்பசாமி கீழே விழுந்து, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனையை சேர்ந்தவர் துரைபாண்டி (48). இவர் சம்பவத்தன்று தனது நண்பர் அதே ஊரை சேர்ந்த அசோக் (35) என்பவருடன் ஒரு காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். காரை துரைபாண்டி ஓட்டினார்.
கார் பாளையங்கோட்டை அருகே உள்ள கொம்மந்தனூர் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ்சும், காரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் காரில் இருந்த துரைபாண்டி பலத்த காயமும், அசோக் லேசான காயமும் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் வந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி துரைபாண்டி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.