கள்ளக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகை
டெண்டர் விடப்பட்ட பணிகளை முடிக்க அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கோரி கள்ளக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் ராஜசேகர், தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் நேற்று கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகத்திடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கடந்த அ.தி.மு.க.ஆட்சியில் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் 15-வது நிதிக்குழு திட்டத்தில் தனிநபர் குடிநீர் குழாய் இணைப்பு, சிறு பாலம் கட்டுதல், கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், திறந்தவெளி குடிநீர் கிணறு, சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது.
நடவடிக்கை
இதில் டெண்டர் விடப்பட்டதில் சில பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் முடிக்கப்பட்ட பணிகளுக்கு உரிய பணம் தரப்படவில்லை. ஒரு சில பணிகள் தொடங்கப்பட்டு முடிக்கப்படாமல் உள்ளது. அந்த பணியை மேற்கொண்டு தொடங்கி முடிக்க அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குவது இல்லை.
இது தவிர டெண்டர் விடப்பட்டும், கொரோனா தொற்று காரணமாக சில பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளன. அந்த பணிகளை தற்போது தொடங்க அதிகாரிகள் அனுமதி அளிப்பதில்லை. எனவே முடிக்கப்பட்ட பணிகளுக்கு உரிய பணத்தை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தொடங்கப்பட்ட பணிகளை முடிக்கவும், தொடங்கப்படாமல் உள்ள பணிகளை தொடங்கி முடிக்க அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை யெனில் நீதிமன்றத்துக்கு செல்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. தொடர்ந்து அ.தி.மு.க.வினர் தங்களது கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதில்அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை உ்ள்பட பலர் கலந்து கொண்டனர்.