கொரோனா தொற்றை குறைக்க முடியாததற்கு மோடி தான் பொறுப்பு ஏற்க வேண்டும்

கொரோனா தொற்றை குறைக்க முடியாததற்கு மோடி தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார்.

Update: 2021-07-08 17:20 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல்- டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்தும், இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் நேற்று விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.டி.வி. சீனிவாசக்குமார் தலைமை தாங்கினார். விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் சிரஞ்சீவி முன்னிலை வகித்தார். 
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு  பேசியதாவது:-

தவறான பொருளாதார கொள்கை

மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையின் அடிப்படையிலேயே பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்ந்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பிரதமராக மன்மோகன்சிங் இருந்தபோது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 108 டாலராக இருந்தது. அன்றைக்கு பெட்ரோலை 70 ரூபாய்க்கு கொடுத்தோம். 
இன்றைக்கு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 50 டாலருக்கு கீழ் வந்துவிட்டது. ஆனால் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. அதுபோலத்தான் சமையல் எரிவாயுவின் விலை 1,000 ரூபாயாகியுள்ளது. காரணம், அவ்வளவு கலால் வரியை மோடி அரசு விதிக்கிறது. 
இந்த சூழ்நிலையை மாற்ற காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல்- டீசல், சமையல் எரிவாயுவை குறைந்த விலைக்கு தருகிறோம் என்று ராகுல்காந்தி கூறியிருக்கிறார். இவ்வளவு ஆணித்தரமாக கூறுகிறார் என்றால் நாங்கள் ஏற்கனவே செய்து காட்டியுள்ளோம். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் செய்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

கையெழுத்து இயக்கம்

அதனை தொடர்ந்து விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கத்தை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார். 
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
செயற்கை விலையேற்றம் 
இன்றைக்கு செயற்கையான ஒரு விலையேற்றத்தை மோடி ஏற்படுத்தியிருக்கிறார். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. தினமும் 100 ரூபாய்க்கு பெட்ரோலை விற்பனை செய்தால், சாதாரண கருவேப்பிலைகூட விலை ஏறும். 
பொருளாதாரம் தெரியாத காரணத்தினால்தான் இந்த தவறை பா.ஜ.க. செய்திருக்கிறது. 
மத்திய அமைச்சரவை மாற்றத்தால் எந்த பலனும் கிடையாது. கொரோனா தொற்றை குறைக்க முடியாததற்கு மோடிதான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். மோடிக்கு மனசாட்சி இருந்தால் அவர் பதவி விலகியிருக்க வேண்டும். பதவி விலகாவிட்டாலும் பரவாயில்லை, தவறு நடந்து விட்டது, கொஞ்சம் மெத்தனமாக இருந்துவிட்டோம் என்று கூறி வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர், சுகாதாரத்துறை அமைச்சரை பலிகடாவாக்கி விட்டார். 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்