கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள்

விழுப்புரத்தில் உள்ள கோவிலுக்குள் நள்ளிரவில் மர்ம நபர்கள் புகுந்து சாமி சிலைகளை சேதப் படுத்தியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-07-08 17:16 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் வாலாம்பிகை சமேத ஆதிவாலீஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை பிரதோஷத்தையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் இரவில் கோவிலை பூட்டிவிட்டு அதன் நிர்வாகிகள் சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை பூஜை செய்வதற்காக கோவிலை திறந்து பார்த்தபோது கோவிலின் கோபுரத்தில் உள்ள சாமி சிலைகளில் உள்ள கைகள் உடைக்கப்பட்டு சேதமாகி இருந்தது. அதுமட்டுமின்றி கோவில் வளாகத்தில் உள்ள அம்மன் சிலைகள், நந்தி பெருமானின் சிலைகளும் மற்றும் கோவிலில் இருந்த மேஜை, நாற்காலிகளும் சேதமடைந்திருந்தது. கோவிலின் மேற்புற பகுதியில் காலி மதுபான பாட்டில்கள், தண்ணீர் பாக்கெட்டுகளும் கிடந்தன.
இதன் அடிப்படையில் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கோவிலுக்குள் புகுந்து மது அருந்தியதோடு போதையில் அங்கிருந்த சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியிருப்பது தெரியவந்தது. 

இந்த தகவல் காட்டுத்தீ போல பரவவே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பலரும், கோவிலுக்கு சென்று அங்கு சாமி சிலைகள் சேதமாகியிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள், விழுப்புரம் மேற்கு போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இளவழகி தலைமையிலான போலீசார், கோவிலுக்கு நேரில் சென்று சேதமடைந்திருந்த சிலைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதோடு கோவில் சாமி சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்