பள்ளி மாணவி பலாத்காரம்; வாலிபர் போக்சோவில் கைது
கிணத்துக்கடவில் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
10-ம் வகுப்பு மாணவி மாயம்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவிக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதி ஆகும். பெற்றோர் இறந்துவிட்டதால் கிணத்துக்கடவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி மாலையில் மாணவி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மாணவியின் உறவினர் கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தனர்.
ஆட்க்கொணர்வு மனு தாக்கல்
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடினர். ஆனாலும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மாணவியின் உறவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்க்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் காணாமல்போன மாணவியை உடனடியாக கண்டு பிடித்து தர வேண்டும் என கிணத்துக்கடவு போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், ஏட்டு ரத்தினசாமி ஆகியோர் காணாமல் போன மாணவியை தீவிரமாக தேடி வந்தனர்.
ஆசைவார்த்தை கூறி கடத்தல்
இந்த நிலையில் பள்ளி மாணவி கர்நாடகா மாநிலம் மங்களூர் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கிணத்துக்கடவு போலீசார் அங்கு சென்று மாணவி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அப்போது மாணவியுடன் வாலிபர் ஒருவர் இருந்தார் அவரை பிடித்து போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், அவர் கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 23) என்பதும், மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
வாலிபர் போக்சோவில் கைது
இதையடுத்து கிணத்துக்கடவு போலீசார் மாணவி காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை கடத்தல் வழக்காக மாற்றினர். தொடர்ந்து பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பலாத்காரம் செய்ததாக வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட மாணவியை கோவையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.