பசுமை வீடுகள் கட்டி கொடுக்க திருநங்கைகள் கோரிக்கை

பொள்ளாச்சியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் பசுமை வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்று திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2021-07-08 17:02 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில்  பசுமை வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்று திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறைதீர்க்கும் முகாம்

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கி பேசினார். 

அப்போது அவர் கூறுகையில், திருநங்கைகள் கொடுக்கும் மனுக்கள் மீது உரிய தீர்வு காணப்படும். மேலும் வங்கிகளில் கடனுதவி தேவைப்பட்டால் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசித்து முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார். பின்னர் அவர் திருநங்கைகளிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

இதை தொடர்ந்து திருநங்கை ஒருவருக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. முகாமில் முதியோர் உதவித்தொகை கேட்டு 12 பேரும், ரேஷன் கார்டு கேட்டு 9 பேரும், வீட்டுமனை பட்டா, பசுமை வீடு கேட்டு தலா 2 பேரும், வாக்காளர் அடையாள அட்டை கேட்டு 15 பேரும் சேர்த்து மொத்தம் 40 மனுக்கள் பெறப்பட்டன. 

முகாமில் நேர்முக உதவியாளர் தணிகவேல், தாசில்தார்கள் அரசகுமார், விஜயகுமார், தனி தாசில்தார் ஜெயசித்ரா, திருநங்கை கல்கி சுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து திருநங்கைகள் கூறியதாவது:-

கணக்கெடுப்பு

ஆனைமலையில் திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. எனவே அங்கு வசிப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

 மேலும் நிலத்தை அளந்து பசுமை வீடுகள் கட்டி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் வசதி இல்லாததால் ஆட்டோவில் தான் வர வேண்டிய உள்ளது. இதனால் கூடுதல் செலவு ஆகிறது.

தற்போது கொரோனா காரணமாக சமையல் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் திருநங்கைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடந்த 2009-ம் ஆண்டு பிறகு திருநங்கைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தவில்லை. 

எனவே திருநங்கைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் முதல் முறையாக திருநங்கைகளுக்கு தனியாக முகாம் நடத்தப்பட்டதால் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்