நெய்வேலியில் வாலிபர் கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவரின் நண்பர் வீ்ட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
நெய்வேலியில் வாலிபர் கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவரின் நண்பர் வீ்ட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெய்வேலி,
கடலூர் மாவட்டம் நெய்வேலி 21-வது வட்டம் நாவலர் தெருவை சேர்ந்தவர் வீரமணி. இவருடைய மகன் சிவா என்கிற சிவக்குமார்(வயது 24). இவரை கடந்த ஏப்ரல் மாதம், 16-வது வட்டத்தில் உள்ள தைலமரத்தோப்பில் வைத்து 21-வது வட்டத்தை சேர்ந்த வெங்கடேசன்(25), விக்னேஷ்(26), மகேஷ்குமார்(24), பாரூக் பாஷா(24) ஆகியோர் வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிந்து வெங்கடேசன் உள்பட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசன் உள்பட 4 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த நிலையில் வெங்கடேசன், அதே பகுதியை சேர்ந்த நண்பர் ஜெயபால்(24) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று வந்ததாக தெரிகிறது.
நாட்டு வெடிகுண்டு வீச்சு
இதை பார்த்து ஆத்திரமடைந்த சிவக்குமாரின் தந்தை வீரமணி, இவருடைய நண்பர்களான சுதாகர், சத்தியமூர்த்தி மற்றும் சிவக்குமாரின் நண்பர்கள் 21-வது வட்டத்தை சேர்ந்த கார்த்திக்(22), ரமேஷ்(31), தமிழரசன்(24), எழிலரசன்(23) ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஜெயபாலின் வீட்டுக்கு சென்று நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசி விட்டு தப்பி ஓடியதாக தெரிகிறது. இதில் அந்த நாட்டு வெடிகுண்டு வீட்டின் முன்பு இருந்த இரும்பு கதவில் பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் இரும்பு கதவு முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து ஜெயபால் நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து கார்த்திக், ரமேஷ், தமிழரசன், எழிலரசன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தலை மறைவாக உள்ள வீரமணி, சுதாகர், சத்தியமூர்த்தி ஆகியோரை தேடி வருகின்றனர்.
வீடு சூறை
இதற்கிடையே ஜெயபாலின் நண்பர்கள் 21-வது வட்டத்தில் உள்ள வீரமணி வீட்டிற்குச் சென்று, கழி மற்றும் இரும்பு பைப்பால், வீட்டில் இருந்த டி.வி., மோட்டார் சைக்கிள், வீட்டு உபயோக பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இது குறித்து வீரமணியின் மனைவி செல்வி கொடுத்த புகாரின்பேரில் தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன், பாரூக் பாஷா, மகேஷ் குமார், விக்னேஷ், கணேஷ் குமார்(25) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் வெங்கடேசன், பாரூக்பாஷா, மகேஷ்குமார், விக்னேஷ் ஆகியோர் ஏற்கனவே சிவக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் நெய்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.