பொள்ளாச்சி அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து

பொள்ளாச்சி அருகே தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் எந்திரம், மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது.

Update: 2021-07-08 16:46 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே சாமியாண்டிபுதூரில் தனியார் ஒருவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று மாலை தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று தென்னை நார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து தொழிலாளர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவ தொடங்கியது. இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் தீர்ந்ததால் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது.

தொழிற்சாலையில் பிடித்த தீயிண் காரணமாக அந்த பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. மாலை 4 மணிக்கு பிடித்த தீயை சுமார் 3 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிவந்தது.

இந்த தீ விபத்தில் தென்னை நார், எந்திரம், மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது. இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்