முத்துப்பேட்டை நகைக்கடையில் ரூ.5 லட்சம் தங்கம், வெள்ளி நகைகள்-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

முத்துப்பேட்டையில் உள்ள நகைக்கடையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update: 2021-07-08 16:11 GMT
முத்துப்பேட்டை:-

முத்துப்பேட்டையில் உள்ள நகைக்கடையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நகைக்கடை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனாஜி(வயது 41). இவர், முத்துப்பேட்டை வாரச் சந்தை சாலையில் நகைக்கடை, அடகு கடை மற்றும் நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனாஜி வழக்கம் போல் கடை மற்றும் பட்டறையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். 
நேற்று காலை அவர் கடைக்கு சென்று பார்த்தபோது கடை அருகே உள்ள பட்டறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் உடனடியாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளதுரை, இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். 

ரூ.5 லட்சம் நகை-பணம்

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், நகைப்பட்டறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 4½ கிலோ வெள்ளி நகைகள், 5 பவுன் நகை, ரூ.52 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. 
திருவாரூரில் இருந்து மோப்ப நாயை வரவழைத்து அங்கு துப்பு துலக்கும் பணிகளை போலீசார் மேற்கொண்டனர். அப்போது மோப்ப நாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. 

போலீசார் விசாரணை

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் தனாஜி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலமாகவும் விசாரணை நடந்து வருகிறது. 
இந்த கொள்ளை சம்பவம் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்