தஞ்சை அரண்மனை, அருங்காட்சியகத்துக்கு பொதுமக்கள் வருகை வெகுவாக குறைந்தது
ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்தாலும் சுற்றுலா தலங்கள்வெறிச்சோடி காணப்படுகிறது. தஞ்சை அரண்மனை, அருங்காட்சியகத்துக்கு பொதுமக்கள் வருகை வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
தஞ்சாவூர்,
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டம் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு உலக பிரசித்தி பெற்ற, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் தஞ்சை பெரியகோவில் உள்ளது. இது தவிர தஞ்சை அரண்மனை, அருங்காட்சியகம், உலகப்புகழ்பெற்ற சரசுவதி மகால் நூலகம் போன்றவை உள்ளது.
தஞ்சை மாவட்டத்திற்கு மட்டும் ஆண்டுக்கு 2 கோடி பேர் சுற்றுலாவாக வந்தனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், வெளி மாநிலத்தவர் என பலர் தஞ்சைக்கு வந்து சென்றனர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. பின்னர் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அக்டோபர் மாதம் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன.
சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே, கொரோனா தொற்று 2-வது அலை தமிழகத்தில் வேகமாக பரவியது. இதையடுத்து மத்திய அரசு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரிய சின்னங்கள், சுற்றுலா தலங்களை மூட உத்தரவிட்டது. அதன்படி தஞ்சை பெரியகோவில் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் ஏப்ரல் 16-ந்தேதியுடன் மூடப்பட்டன.
இதே போல் தமிழக அரசும் சுற்றுலா தலங்களை மூட உத்தரவிட்டது. அதன்படி மூடப்பட்டன. இந்தநிலையில் சுற்றுலா தலங்களை தமிழக அரசு கடந்த 5-ந்தேதி முதல் திறக்க உத்தரவிட்டது. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று 200-க்கும் கீழ் குறையாததால் சுற்றுலா தலங்கள் 5-ந்தேதிக்கு பதிலாக 6-ந்தேதி முதல் திறக்கப்பட்டன.
அதன்படி தஞ்சை அரண்மனை, அருங்காட்சியகம் உள்ளிட்டவை திறக்கப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டாலும் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. தற்போது பஸ் போக்குவரத்து தொடங்கினாலும் வெளியூர் பயணிகள் வருகை வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
தஞ்சையில் உள்ள அரண்மனை மற்றும் அருங்காட்சியகம் திறக்கப்பட்ட முதல் நாளில் 132 சுற்றுலா பயணிகள் மட்டும் வந்து பார்வையிட்டுள்ளனர். நேற்று அதை விட சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக காணப்பட்டது. இன்னும் சில நாட்களுக்குப்பின்னரே சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் வருகை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
தற்போது பள்ளிகள் விடுமுறை என்றாலும், வெளியூர் பயணிகள் வருகை குறைவாக உள்ளது. கோவில்கள், வளியூர்களுக்கு கார், வேன் போன்ற வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் தான் தற்போது செல்லும் வழியில் தஞ்சைக்கு வந்து பார்த்து செல்கிறார்கள்.
சுற்றுலா பயணிகளின் வருகை குறைவால் இந்த பகுதியில் கடைகளை திறந்து வைத்திருக்கும் வியாபாரிகளும் வியாபாரம் இன்றி ஏமாற்றம் அடைந்துள்ளனர்.