தஞ்சை பெரியகோவிலில் நந்தியம்பெருமானுக்கு நடந்த பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்பு
தஞ்சை பெரிய கோவிலில் நந்தியம் பெருமானுக்கு நடந்த பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் நேற்று பங்கேற்றனர். அவர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றகோவிலாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் உள்ள நந்தியம்பெருமானுக்கு பிரதோஷ வழிபாட்டின் போது பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். பால், வில்வம், மஞ்சள், சந்தனம், தயிர் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், கொரோனா 2-வது அலை எதிரொலியாக, கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி கோவில் மூடப்பட்டது. இருப்பினும், கோவிலில் தினமும் நான்கு கால பூஜைகள் வழக்கம் போல நடத்தப்பட்டது. கோவில் மூடப்பட்ட பின்னர் பக்தர்கள் இன்றி கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோவில் கடந்த 5-ந்தேதி முதல் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பிரதோஷமான நேற்று பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள், சந்தனம் போன்ற மங்கல பொருள்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிரதோஷத்தை காண வந்திருந்த பக்தர்கள் கோவில் பிரகாரத்தில் சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டனர். 5 பிரதோஷங்களுக்குப்பின்னர் நேற்று பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதே போல கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி 12 முறை பிரதோஷ வழிபாடு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.