மாற்று சான்றிதழ் இல்லாவிட்டாலும் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை சேர்க்கலாம்- அரசு பள்ளிகளுக்கு, முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு
மாற்றுச்சான்றிதழ் இல்லாவிட்டாலும் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம் என்று அரசு பள்ளிகளுக்கு, முதன்மை கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
சேலம்:
மாற்றுச்சான்றிதழ் இல்லாவிட்டாலும் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம் என்று அரசு பள்ளிகளுக்கு, முதன்மை கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
மாணவர் சேர்க்கை
சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் ஆன்லைன் மூலம் நடந்தது. மாவட்ட கல்வி அதிகாரிகள், வட்டார வள மேற்பார்வையாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பல்வேறு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாற்றுச்சான்றிதழ் இல்லை என்றாலும் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம். 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தற்காலிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.
பதிவு செய்ய வேண்டும்
விரைவில் மாற்றுச்சான்றிதழை சமர்ப்பிக்கும் படி மாணவ, மாணவிகளிடம் அறிவுறுத்த வேண்டும். அதே போன்று ஏற்கனவே படித்த மாணவர்கள் அந்தந்த பள்ளியில் மேல்வகுப்பில் சேரவில்லை என்றால் அவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர்களை சேர்க்கும் போது அவர்களது வீட்டில் தொலைக்காட்சி பெட்டி, ஸ்மார்ட்போன் ஆகியவை உள்ளதா? என கேட்டு, பதிவு செய்து கொள்ள வேண்டும். அதே போன்று தினமும் மாணவர் சேர்க்கையின் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.