சேலம் ஜங்ஷனில் பரபரப்பு: ஓடும் ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையில் தவறி விழுந்த வாலிபர்- பெண் போலீசார் மீட்டனர்
சேலம் ஜங்ஷனில் ஓடும் ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையில் தவறி விழுந்த வாலிபரை பெண் போலீசார் மீட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.;
சூரமங்கலம்:
சேலம் ஜங்ஷனில் ஓடும் ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையில் தவறி விழுந்த வாலிபரை பெண் போலீசார் மீட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஓடும் ரெயிலில்...
ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து ஹாட்டாயா- எர்ணாகுளம் (வண்டி எண் 02409) எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் 4-வது பிளாட்பாரத்துக்கு வந்தது. சிறிது நேரம் நின்ற ரெயில் மீண்டும் புறப்பட்ட போது ரெயிலில் இருந்து வாலிபர் ஒருவர் அவசர அவசரமாக கீழே இறங்கினார்.
அப்போது அவர் ஓடும் ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே தவறி விழுந்தார். இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் அஸ்வினி, மஞ்சு ஆகிய இருவரும் கவனித்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் செயல்பட்டு அந்த வாலிபரை மீட்டனர். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதால் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பாராட்டு
அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது, அவரது பெயர் சிவன்குமார் (வயது 21) என்பதும், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தவறி விழுந்த சிவன்குமாரை துரிதமாக செயல்பட்டு மீட்ட பெண் போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
சேலம் ஜங்ஷனில் ஓடும் ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையில் விழுந்த வாலிபர் மீட்கப்பட்ட சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.