விவசாயி அடித்துக்கொலை; தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
வழிப்பாதை தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கொள்ளேகால்: வழிப்பாதை தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வழிப்பாதை தகராறு
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொத்தலவாடி கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது 66). விவசாயியான இவர் சாம்ராஜ்நகர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவரான சசிகலா சோமலிங்கப்பாவின் தந்தை ஆவார். குருசாமியின் மகன் மஞ்சுநாத் (28) ஆவார்.
இந்த நிலையில் குருசாமிக்கும், கொத்தலவாடி கிராமத்தை சேர்ந்த விவசாயியான மலே மாதப்பா (59) என்பவருக்கு விவசாய நிலத்தில் வழிப்பாதை தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
அடித்துக்கொலை
இதற்கிடையே நேற்று முன்தினமும் குருசாமி மற்றும் மலேமாதப்பா குடும்பத்தினர் இடையே வழிப்பாதை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த மலே மாதப்பா, அவரது மனைவி மங்களம்மா (50), மல்லிகார்ஜுனா (24) ஆகியோர் சேர்ந்து குருசாமி, அவரது மகன் மஞ்சுநாத் ஆகியோரை சரமாரியாக உருட்டுக்கட்டையால் தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த குருசாமி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். அவரது மகன் மஞ்சுநாத் படுகாயத்துடன் மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வலைவீச்சு
இந்த கொலை தொடர்பாக சாம்ராஜ்நகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவான மலே மாதப்பா உள்பட 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.