மத்திய, மாநில பா.ஜனதா அரசுகள் மீது சித்தராமையா குற்றச்சாட்டு

மத்திய, மாநில பா.ஜனதா அரசுகள் மனிதாபிமானம் இல்லாமல் செயல்படுவதாகவும், மக்கள் நலனில் இரு அரசுகளுக்கும் அக்கறை இல்லை என்றும் சித்தராமையா கூறினார்.

Update: 2021-07-07 21:16 GMT
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா.
மைசூரு: மத்திய, மாநில பா.ஜனதா அரசுகள் மனிதாபிமானம் இல்லாமல் செயல்படுவதாகவும், மக்கள் நலனில் இரு அரசுகளுக்கும் அக்கறை இல்லை என்றும் சித்தராமையா கூறினார். 

சித்தராமையா வருகை

முன்னாள் முதல்-மந்திரியும், தற்போது சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா நேற்று மைசூருவுக்கு வந்தார். அவர் மைசூரு ரெயில் நிலையம் அருகே உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து நகர் மற்றும் புறநகர் பகுதி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய, மாநில பா.ஜனதா அரசுகள் மந்த நிலையில் செயல்படுகிறது. 2 அரசுகளும் மனிதாபிமானம் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. கொள்ளை அடிப்பதில் இரு அரசுகளும் தோழமையுடன் செயல்படுகின்றன. மக்களைப் பற்றி இரு அரசுகளும் சிந்திப்பதில்லை. 

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. சமையல் எண்ணெய் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பி.பி.எல். ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.10 ஆயிரத்தை மாநில அரசு நிவாரணமாக வழங்கியிருக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் தலா ரூ.10 ஆயிரம் நிவாரண நிதியும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் கணக்கிட்டு தலா 10 கிலோ அரிசியும் வழங்கியிருப்போம்.

முதல்-மந்திரி எடியூரப்பாவும், அவரது மகன் விஜயேந்திராவும் பொக்லைன் எந்திரத்தின் மூலம் மணல் அள்ளுவதைப் போல பணத்தை கொள்ளையத்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி கூறுவதெலாம் பொய். அவர் அறிவித்த ஒரு திட்டம் கூட இதுவரையில் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. நாட்டில் ஊழல், லஞ்சம், முறைகேடு போன்றவை தலைவிரித்தாடுகிறது. மக்கள் நலனில் இரு அரசுகளுக்கும் அக்கறை இல்லை. முதல்-மந்திரி எடியூரப்பா மாநிலத்தின் வளர்ச்சிக்காக கடன் பெறுகிறேன் என்று கூறி இதுவரையில் ரூ.2 லட்சம் கோடி அளவில் கடன் பெற்றிருக்கிறார். அவர் இப்படியே கடன் வாங்கிக் கொண்டு இருந்தால் மாநிலத்தின் வளர்ச்சி என்ன ஆகும் என்று தெரியவில்லை?. கட்சிக்கு துரோகம் செய்தவர்களை கட்சியில் சேர்க்கக்கூடாது என்று நான் திட்டவட்டமாக கூறி வருகிறேன். எனது நிலையில் மாற்றம் இல்லை. 
இவ்வாறு சித்தராமையா கூறினார். 

சைக்கிள் பேரணி

முன்னதாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மைசூரு காந்தி சவுக்கில் இருந்து காங்கிரசார் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர். இந்த சைக்கிள் பேரணி காந்தி சவுக்கில் தொடங்கி காங்கிரஸ் அலுவலகத்தில் முடிந்தது. சித்தராமையா வருகையையொட்டி காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். 

மேலும் செய்திகள்