வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை
தஞ்சை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், நடைமேடை, பயணிகள் அறை, பார்சல் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.;
தஞ்சாவூர்:
தஞ்சை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், நடைமேடை, பயணிகள் அறை, பார்சல் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரெயில் நிலையம்
தஞ்சை ரெயில் நிலையம் மிகவும் பழமை வாய்ந்த ரெயில் நிலையமாகும். தஞ்சை வழியாக 20-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 15-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ரெயில்கள் இயக்கப்படுவது ரத்து செய்யப்பட்டது.
தற்போது தஞ்சை வழியாக சிறப்பு ரெயி்ல்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை வழியாக தற்போது சென்னை, நாகர்கோவில், திருச்செந்தூர், பெங்களூரு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
இதனால் எப்போதும் பரப்பாக காணப்படும் தஞ்சை ரெயில் நிலையத்தில் தற்போது ரெயில் வரும் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் பயணிகள் நடமாட்டம் உள்ளது.இந்த நிலையில் நேற்று தஞ்சை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடை, முன்பதிவு மையம், பார்சல் அறை, பயணிகள் தங்கும் அறை, தண்டவாளம் பகுதிகளிலும் சென்று சோதனை நடத்தினர். 1 மணி நேரத்திற்கும் மேல் இந்த சோதனை நடத்தப்பட்டது. தஞ்சை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் திருச்சி வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி, ஏட்டு வெங்கடேசன், போலீஸ்காரர் முருகானந்தம் ஆகியோர் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
பயணிகளிடையே பரபரப்பு
திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக சென்னை சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகையின்போது அங்கிருந்த பயணிகளின் உடைமைகளிலும் சோதனை நடத்தினர். இதனால் அங்கிருந்த பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து போலீசார் கூறுகையில், திருச்சி கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் அடிக்கடி சோதனை மேற்கொள்வது வழக்கம். மாதத்திற்கு ஒருமுறை திருச்சி கோட்டத்திற்குட்பட்ட அனைத்து ரெயில் நிலையங்களுக்கு சென்று சோதனை நடத்துவோம். அதன்படி தஞ்சை ரெயில் நிலையத்திலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.என்றனர்.