இடத்தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு
ஊத்துமலை அருகே இடத்தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
ஆலங்குளம்:
ஊத்துமலை அருகே உள்ள கருவந்தா தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன் (29). இவர்கள் இருவரது குடும்பத்திற்கும் இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை ஜெயக்குமாரின் இடத்தில் இருந்த செடியை அருள்முருகன் குடும்பத்தினர் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதையடுத்து ஜெயக்குமாரின் நண்பர் திலீப் தடுக்க முயன்றார். அப்போது ஆத்திரத்தில் இருந்த அருள் முருகன் மற்றும் அவரது சகோதரர் லிங்குசாமி ஆகிய 2 பேரும் ஜெயக்குமார், திலீப் ஆகியோரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு அருள் முருகன், லிங்குசாமி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.