கொடூரமாக கொலை செய்யப்பட்டவர் அருப்புக்கோட்டை நகை வியாபாரி
குருவிகுளம் அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டவர் அருப்புக்கோட்டை நகை வியாபாரி என தெரியவந்தது. இதுதொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவேங்கடம்:
குருவிகுளம் அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டவர் அருப்புக்கோட்டை நகை வியாபாரி என தெரியவந்தது. இதுதொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிணமாக கிடந்தார்
தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே உள்ள அராபாத் நகரை ஒட்டியுள்ள குளத்தில் நேற்று முன்தினம் கழுத்து வெட்டுப்பட்டு கொடூரமான முறையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் குருவிகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்?, எந்த ஊர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
பின்னர் அந்த பகுதியில் குளத்திற்கு செல்லும் பிரதான சாலையில் கேட்பாரற்று நின்று கொண்டிருந்த காரை போலீசார் கைப்பற்றினர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நகை வியாபாரி
விசாரணையில், குளத்தில் பிணமாக கிடந்தவர், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருணாசலம் ஆசாரி தெருவை சேர்ந்த செந்தில் குமார் (வயது 40), நகை வியாபாரி என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த 5-ந் தேதி சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஒருவருக்கு பணம் கொடுத்து நகையை வாங்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு செந்தில் குமார் வந்துள்ளார். இதற்கிடையே குருவிகுளம் அருகே உள்ள குளத்தில் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
4 பேரை பிடித்து விசாரணை
இந்த கொலை தொடர்பாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்யின் பேரில் துணை சூப்பிரண்டு ஜாகிர்உசேன் மேற்பார்வையில் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக ஒரு பெண் உள்பட 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.