கரூர் ரெயில் நிலையத்தில் பூட்டியே கிடக்கும் கழிப்பறை திறக்கப்படுமா?
கரூர் ரெயில் நிலையத்தில் பூட்டியே கிடக்கும் கழிப்பறை திறக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கரூர்
ரெயில் நிலையம்
கரூர் ரெயில் நிலையத்திற்கு நாள் தோறும் பல ெரயில்கள் வந்து செல்கிறது. இதனால் பல ஊர்களுக்கு பயணிக்க நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான பயணிகள் ெரயில் நிலையத்திற்கு வந்த செல்கின்றனர். இவ்வாறு வரும் ரெயில் பயணிகளை வழியனுப்பவும் பலர் வந்து செல்கின்றனர்.
இதில், காலை, மாலை என இரு வேளைகளில் பாசஞ்சர் ரெயில் கரூரில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து கரூருக்கும் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் டெக்ஸ்டைல் உள்ளிட்ட தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பயணிகள் பலர் வந்து இறங்கியும், ஏறியும் சென்று வருகின்றனர்.
கழிப்பறை வசதி
இவ்வாறு ரெயில் நிலையம் வரும் பயணிகளின் இயற்கை உபாதை கழிக்கவும், ரெயில் நிலைய வளாகத்தில் வெளிப்புறம் பகுதியில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவினருக்கும் தனிதனியாக கழிப்பறை வசதியடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் ரெயில்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனால் கட்டிடம் பூட்டியே கிடந்தது. தற்போது ஊரடங்கு உத்தரவு சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டு ரெயில்போக்குவரத்து தொடங்கி உள்ளது. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி பூட்டியே கிடக்கும் புதிய கழிப்பறை திறப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.