லாலாபேட்டையில் டயர் வெடித்து பூச்சி மருந்துகள் ஏற்றி வந்த சரக்கு வேன் கவிழ்ந்தது
லாலாபேட்டையில் டயர் வெடித்து பூச்சி மருந்துகள் ஏற்றி வந்த சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
லாலாபேட்டை
சரக்கு வேன் கவிழ்ந்தது
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் ஒரு சரக்கு வேனில் நேற்று காலை பூச்சி மருந்துகளை பெட்டிகளில் ஏற்றிக் கொண்டு புதுக்கோட்டையில் இருந்து கோவையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த சரக்கு வேன் கரூர் மாவட்டம், லாலாபேட்டை பஸ் நிலையம் அருகே கரூர் -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக சரக்கு வேனின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் தாறுமாறாக ஓடி சாலையில் தலை குப்புற கவிழ்ந்தது. இதனால் சரக்கு வேனில் இருந்த பூச்சி மருத்து பெட்டிகள் அனைத்தும் சாலையில் சிதறின.
டிரைவர் காயம்
இதில் இடிபாடுகளில் சிக்கிய ஆனந்த் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் அந்த சரக்கு வேனை நிமர்த்தி வைத்து, சாலையில் சிதறி கிடந்த பூச்சி மருந்து பெட்டி களை அதே வேனில் பொதுமக்கள் உதவியுடன் டிரைவர் ஏற்றினார். பின்னர் அந்த சரக்கு வேன் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் நடந்தபோது எதிரே எந்த வாகனமும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.