அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க கல்வி அதிகாரிகள் ஆய்வு
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நீடாமங்கலத்தி்ல் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.;
நீடாமங்கலம்;
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நீடாமங்கலத்தி்ல் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
முதல்- அமைச்சர் உத்தரவு
தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி நீடாமங்கலம் அரசு உயர் நிலைப்பள்ளியில் திருவாரூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டியதன் அவசியம் குறித்து நாளிதழ்களில் செய்தி வெளியானது. இந்த செய்தியை திருவாரூரில் தங்கியிருந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படித்தார். இதைத்தொடர்ந்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழிைய அழைத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்திரிக்கை செய்தியின் அடிப்படையில் நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
ஆலோசனை
இதன்பேரில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி திருவாரூர் மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் இந்த விவரத்தை கூறி உரிய அறிக்கை அனுப்ப கேட்டுக் கொண்டார். இதன் பேரில் திருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமன், மாவட்ட கல்வி அதிகாரி மணிவண்ணன், உதவித்திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நேற்று சென்றனர். அப்போது நீடாமங்கலம் ஒன்றியக்குழுத்தலைவர் செந்தமிழ்செல்வன், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் அப்பாவு ஆகியோருடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
3 ஏக்கர் நிலம்
உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினால் புதிதாக மேல்நிலைப்பள்ளி கட்டிடம் கட்ட சுமார் 3 ஏக்கர் நிலம் வேண்டும் என அதிகாரிகள் கூறினர். அப்போது பொதுமக்கள் பங்களிப்புடன் இடத்துக்கான ஏற்பாடுகளை செய்வது என பெற்றோர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. நீடாமங்கலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.