மரபணு மாற்ற பருத்தி விதைகளை விற்றால் உரிமம் ரத்து

களைக் கொல்லி, மரபணு மாற்றம் செய்த பருத்தி விதைகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை விதைஆய்வு துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-07-07 17:40 GMT
சிவகங்கை, 
களைக் கொல்லி, மரபணு மாற்றம் செய்த பருத்தி விதைகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை விதைஆய்வு துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
விதை சாகுபடி
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் விதை ஆய்வு துணை இயக்குனர் சோ. துரைக்கண்ணம்மாள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
மத்திய, மாநில அரசுகளால் அனுமதி வழங்கப்படாத களைக்கொல்லி எதிர்ப்பு சக்தியுடைய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளை சாகுபடி மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை மற்றும் இளையான்குடி வட்டாரத்தில் உள்ள பெரும்பான்மையான கிராமங்களில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. 
இதனால் மாவட்டத்திற்கு விற்பனைக்காக வரும் அனைத்து பருத்தி விதை குவியல்களிலும் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் களைக்கொல்லி, மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. 
கட்டுப்பாடு
காய்புழு எதிர்ப்பு சக்தியுடைய மரபணு மாற்றம் செய்த பருத்தி விதைகள் விற்பனை செய்ய அனுமதி வழங்கி நடைமுறையில் உள்ளது. ஆனால் களைக்கொல்லி மரபணு மாற்றம் செய்த பருத்தி விதைகளை விற்பனை செய்ய அனுமதி அளிக்கவில்லை. விற்பனையாளர்கள் அந்த விதைகளை இருப்பு வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ விதை விற்பனை உரிமம் ரத்து செய்வதுடன் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955, விதைகள் சட்டம் 1966 மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் படி நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்