காரில் கடத்திய 17 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சியில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு காரில் கடத்திய 17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சினிமா பாணியில் விரட்டி பிடித்து 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-07 17:40 GMT
கன்னிவாடி:

காரில் கஞ்சா கடத்தல்

திருச்சியில் இருந்து திண்டுக்கல் வழியாக ஒட்டன்சத்திரத்துக்கு, காரில் கஞ்சா கடத்தி செல்வதாக போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து குறிப்பிட்ட பதிவு எண் கொண்ட அந்த காரை போலீசார் கண்காணித்தனர்.

திண்டுக்கல் புறநகர் பகுதியை தாண்டி, ஒட்டன்சத்திரம் நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து ஒட்டன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, ரெட்டியார்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் அந்த காரை பார்த்து விட்டனர்.

 சினிமா பாணியில்

இதைத்தொடர்ந்து சினிமா பாணியில் போலீசார், தங்களது வாகனத்தில் அந்த காரை விரட்டி சென்றனர். தங்களை போலீசார் பின்தொடர்ந்து வருவதை அறிந்த கார் டிரைவர், திண்டுக்கல்-பழனி மெயின்ரோட்டில் செல்லாமல் கிராமத்துக்கு சாலைக்கு காரை திருப்பினார்.

திண்டுக்கல்லில் இருந்து அகரம், நால்ரோடு, சுள்ளெறும்பு வழியாக கெச்சாணிப்பட்டி புதூர் பிரிவு அருகே கார் சென்று கொண்டிருந்தது. சுமார் 10 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று போலீசார் அந்த காரை மடக்கி பிடித்தனர்.  

அந்த காரில் 3 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
 
 17 கிலோ பறிமுதல்

விசாரணையில் அவர்கள், திண்டுக்கல் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 23), வேடசந்தூர் அருகே உள்ள சேடப்பட்டியை சேர்ந்த பொன்ராஜ் (21), திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்த நவீன் (22) என்று தெரியவந்தது.

மேலும் அந்த காரில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது காருக்குள் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காரில் இருந்த 17 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதுதொடர்பாக ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைதுசெய்தனர்.

மேலும் செய்திகள்