ராணுவவீரர்-தம்பியை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை

தேனியில் மனைவியை கொலை செய்த ராணுவ வீரர், அவருடைய தம்பியான போலீஸ்காரர் ஆகிய 2 பேரையும் 2 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-07-07 17:32 GMT
தேனி: 

ராணுவ வீரர் மனைவி கொலை
தேனி பாரஸ்ட்ரோடு 12-வது தெருவை சேர்ந்த சிவக்குமார் மகன் ஈஸ்வரன் (வயது 26). இவர் இந்திய ராணுவ வீரராக சென்னையில் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கிரிஜாபாண்டி (24). கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு கிரிஜாபாண்டி மாயமானார். 

அவரை பார்க்க முடியாததால் எனது மகள் மாயமானதில் சந்தேகம் உள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்துமாறும் தேனி போலீஸ் நிலையத்தில் அவருடைய தந்தை செல்வம் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கிரிஜாபாண்டியை அவருடைய கணவர் ஈஸ்வரன் கொலை செய்தது தெரியவந்தது. 

இந்த கொலை மற்றும் கொலைக்கு பின்பு தடயங்களை மறைக்க பழனி பட்டாலியன் படைப்பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றிய அவருடைய தம்பி ஈஸ்வரன் என்ற சின்ன ஈஸ்வரன் (23), தாய் செல்வி (54) ஆகியோர் உடந்தையாக இருந்தனர். 

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் தேனி போலீசார் கடந்த 2-ந்தேதி கைது செய்தனர். கைதான ஈஸ்வரன், சின்ன ஈஸ்வரன் ஆகிய 2 பேரும் ஸ்ரீவில்லிப்புத்தூர் சிறையிலும், செல்வி நிலக்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டனர். 

காவலில் எடுத்து விசாரணை
இந்த கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட போதிலும், போதிய தடயங்கள் போலீசாருக்கு கிடைக்கவில்லை. குறிப்பாக கிரிஜாபாண்டியின் எலும்புத்துண்டுகள் கூட கிடைக்கவில்லை. 

அவரை கொலை செய்து பிணத்தை முல்லைப்பெரியாற்றில் மூட்டை கட்டி வீசியதாக ஈஸ்வரன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார். ஆனால், முல்லைப்பெரியாற்றில் 2 நாட்கள் தேடிப் பார்த்தும் எலும்புத்துண்டு கூட கிடைக்கவில்லை. 

அதேநேரத்தில், ஆற்றில் இருந்து ஈஸ்வரன் ஒரு கல்லை தூக்கி வந்து அந்த கல்லில் தான் பிணத்தை கட்டி வீசியதாக கூறியிருந்தார்.
இதனால், இந்த வழக்கில் தடயங்கள் சேகரிக்கவும், மேலும் விசாரணை நடத்தவும் வேண்டியது உள்ளதால் சிறையில் உள்ள ஈஸ்வரன், சின்ன ஈஸ்வரன் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் அனுமதி கேட்டனர்.

 அதன்படி, 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதித்தது. இதையடுத்து இருவரையும் ஸ்ரீவில்லிப்புத்தூர் சிறையில் இருந்து போலீசார் நேற்று தேனிக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் நேற்று மாலை போலீசார் விசாரணையை தொடங்கினர்.

உண்மையில் பிணத்தை ஆற்றில் தான் வீசினார்களா? அல்லது வேறு எங்கேயாவது புதைத்து விட்டு பிணம் கிடைக்கக்கூடாது என்பதற்காக ஆற்றில் வீசியதாக நாடகம் ஆடுகிறார்களா? என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்