இ-பாஸ் இல்லாமல் வந்த கார்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
கேரளாவில் இருந்து அய்யன்கொல்லிக்கு இ-பாஸ் இல்லாமல் வந்த கார்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பந்தலூர்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வர இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் இ-பாஸ் பெறாமல் கேரளாவில் இருந்து கார்கள் வந்து செல்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில், பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் கூடலூர் பழங்குடியின நலத்துறை தாசில்தார் சித்துராஜ் மற்றும் கொரோனா சிறப்பு பறக்கும் படை அதிகாரிகள், வனத்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கேரளாவில் இருந்து வந்த 2 கார்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், இ-பாஸ் பெறாமல் தமிழக எல்லைக்குள் வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 கார்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் விதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். அப்போது காரில் இருந்தவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அறிந்த சேரம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை கண்டித்தனர். இதையடுத்து அவர்களிடம் அபராத தொகை வசூலிக்கப்பட்டது.