கோத்தகிரி அருகே நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்
கோத்தகிரி அருகே நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி ஒன்றியம் ஜக்கனாரை ஊராட்சிக்கு உட்பட்டது அரவேனு ஹட்டி கிராமம். இங்கு 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த சிலர் நடைபாதையை ஆக்கிரமித்து கழிப்பறை உள்ளிட்ட கட்டிடங்களை கட்டியிருந்தனர்.
இதனால் சாலை குறுகியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் குன்னூர் சப்-கலெக்டருக்கு மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டனர்.
ஆனால் அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற முன்வரவில்லை. இதையடுத்து குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, ஆக்கிரமிப்பை அகற்ற கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ணமூர்த்திக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் பாதுகாப்புடன் கோத்தகிரி வருவாய் ஆய்வாளர் தீபக் மற்றும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.