கல்லுக்குழியில் பிணமாக கிடந்த ஆதிவாசி வாலிபர்
குன்னூர் அருகே கல்லுக்குழியில் ஆதிவாசி வாலிபர் பிணமாக கிடந்தார்.
குன்னூர்
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியார் புதுக்காடு என்ற ஆதிவாசி கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் முத்து என்பவரின் மகன் கணேசன் (வயது 22). இவர் கடந்த 4-ந் தேதி தனது நண்பர்களுடன் வனப்பகுதிக்கு தேன் எடுக்க சென்றார். அப்போது திடீரென மழை பெய்ததால் நண்பர்கள் அனைவரும் வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டனர். ஆனால் கணேசன் மட்டும் வீடு திரும்பவில்லை. மேலும் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பர்லியார் அருகே உள்ள அஜ்ஜரை நீரோடை என்ற இடத்தில் உள்ள கல்லுக்குழியில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த பர்லியார் கிராம நிர்வாக அலுவலர் வெலிங்டன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
இதில் இறந்தது ஆதிவாசி வாலிபரான கணசேன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரது உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆதிவாசி வாலிபர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.