கோத்தகிரியில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கோத்தகிரியில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
கோத்தகிரி
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று காலை முதல் வெயில் அடித்தது. பின்னர் 11 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மதியம் 12 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதனால் ஊட்டியில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மழையில் நனையாமல் இருக்க பொதுமக்கள் குடைகளை பிடித்தபடி கடைகளுக்கு சென்று வந்தனர். பலத்த மழை காரணமாக ஊட்டி கோடப்பமந்து கால்வாயில் தண்ணீர் அதிகமாக பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல கோத்தகிரி சுற்று வட்டார பகுதியில் நேற்று மதியம் பலத்த மழை பெய்தது. இதில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை அருகே ராட்சத மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பபட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கோத்தகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் மாதன் (பொறுப்பு) தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.
நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- குந்தா-1, பந்தலூர்-24, சேரங்கோடு-6 என மொத்தம் 31 மி.மீ மழை பெய்தது.