ஊட்டி உழவர் சந்தையில் சுழற்சி முறையில் கடைகள் திறப்பு

ஊட்டி உழவர் சந்தையில் சுழற்சி முறையில் கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டது. தடுப்பூசி செலுத்திய வியாபாரிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

Update: 2021-07-07 17:07 GMT
ஊட்டி

ஊட்டி உழவர் சந்தையில் சுழற்சி முறையில் கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டது. தடுப்பூசி செலுத்திய வியாபாரிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

சுழற்சி முறையில் திறப்பு

நீலகிரி மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் உழவர் சந்தை ஊட்டி சேரிங்கிராசில் செயல்பட்டு வருகிறது. அங்கு கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. 

இதைதொடர்ந்து உழவர் சந்தையில் உள்ள கடைகள் என்.சி.எம்.எஸ். வாகன நிறுத்துமிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. முழு ஊரடங்கு உத்தரவால் கடைகள் திறக்க அனுமதி இல்லாததால், நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

கடந்த 5-ந் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அமலுக்கு வந்தது. தொடர்ந்து வாகன நிறுத்துமிடத்தில் மீண்டும் உழவர் சந்தை செயல்பட தொடங்கியது. அவ்வப்போது மழை பெய்து வருவதால் பழைய இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து உழவர் சந்தையில் நேற்று முதல் சுழற்சி முறையில் கடைகள் திறக்கப்பட்டன. மொத்தம் 82 கடைகள் உள்ளது. ஏ என குறிப்பிடப்பட்ட கடைகள் நேற்று திறந்து செயல்பட்டது.

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அனுமதி

ஏ என குறிக்கப்பட்ட கடைகள் உழவர் சந்தையிலும், பி என குறிக்கப்பட்ட கடைகள் என்.சி.எம்.எஸ். வாகன நிறுத்துமிடத்திலும் தலா 2 நாட்கள் மாறி, மாறி செயல்படுகிறது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, உழவர் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க சுழற்சி முறையில் கடைகள் திறக்கப்பட்டு உள்ளது. தொற்று பரவலை தடுக்க கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட வியாபாரிகள் மட்டும் கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டது. இன்னும் 15 பேர் தடுப்பூசி செலுத்தவில்லை. அவர்கள் கடைகளை திறக்க அனுமதி கிடையாது. 

சமூக இடைவெளியை கடைபிடிப்பது உடன், கட்டாயம் முககவசம் அணிந்து பொதுமக்கள் பொருட்கள் வாங்கி செல்ல வேண்டும். இதனை கண்காணித்து வருகிறோம் என்றனர். முதல் நாள் என்பதால் உழவர் சந்தையில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்