கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

தேனி மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

Update: 2021-07-07 15:44 GMT
தேனி: 


கொரோனா தடுப்பூசி
நாடு முழுவதும் கொரோனா எனும் கொடிய வைரசிடம் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. அதில் முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கும், அதைத்தொடர்ந்து 60 வயது முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

அதன்பிறகு 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் தொடங்கின. பின்னர் இந்த தடுப்பூசி திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. 

கர்ப்பிணிகளுக்கு...
இதில் குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு கடந்த மாதத்தில் இருந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 845 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில், 2 லட்சத்து 11 ஆயிரத்து 784 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 27 ஆயிரத்து 61 பேருக்கு 2 தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படாமல் இருந்தது. கொரோனா வைரசால் கர்ப்பிணிகள் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தலாம் என அரசு அறிவித்தது. அதன்படி, தேனி மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது.

முதல் நாளில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 5 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 


இதுகுறித்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜிநாதனிடம் கேட்டபோது, ‘கர்ப்பிணிகளையும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த பணிகள் தொடங்கி உள்ளன. 


இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகளுக்கும் இணையவழியில் பயிற்சி அளிக்கப்பட்டது. கர்ப்பிணிகள் கருவுற்ற நாளில் இருந்து 3 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்’ என்றார்.

மேலும் செய்திகள்