தானியங்களை காய வைக்க உலர் களம் அமைத்து தர வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்
தஞ்சை பகுதியில் உள்ள கிராமங்கள்தோறும் விளைவித்த தானியங்களை காய வைக்க உலர்களம் அமைத்து தர வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பிள்ளையார்பட்டி,
தஞ்சையை அடுத்து உள்ள மாப்பிள்ளைநாயக்கன்பட்டி, திருக்கானூர்பட்டி, அற்புதாபுரம், திருமலைசமுத்திரம், மொன்னையம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பெரும்பாலான கிராம பகுதிகள் விவசாயம் செய்யும் பகுதிகள் ஆகும்.
முழுக்க, முழுக்க விவசாயம் சார்ந்த இந்த கிராமங்களில் நெல் மட்டுமல்லாது பணப்பயிர்களான எள், உளுந்து, சோளம், நிலக்கடலை, பச்சைப்பயறு உள்பட பல்வேறு தானியங்களை விவசாயிகள் தங்களது நிலங்களில் பயிர் செய்து வருகிறார்கள்.
விவசாயிகள் தங்கள் வயலில் விளையும் எள், உளுந்து, சோளம், நிலக்கடலை மற்றும் விளைபொருட்களை தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வெயிலில் காயவைத்து உலர்த்தி வருகின்றனர். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் சாலைகளில் இவைகளை கொட்டி உலர்த்தி வருவதால் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலைகளில் அடிக்கடி விபத்துக்களும் நடந்து வருகிறது.
எனவே தஞ்சை பகுதியில் உள்ள மாப்பிள்ளைநாயக்கன்பட்டி, திருக்கானூர்பட்டி, அற்புதாபுரம், திருமலைசமுத்திரம், மொன்னையம்பட்டி ஆகிய கிராமங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை காய வைக்க கிராமங்கள்தோறும் உலர் களங்களை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.