கணியம்பாடி வட்டாரத்தில் சொட்டுநீர் பாசன திட்டத்துக்கு ரூ.2¼ கோடி ஒதுக்கீடு

கணியம்பாடி வட்டாரத்தில் சொட்டுநீர் பாசன திட்டத்துக்கு ரூ.2¼ கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-07 13:41 GMT
அடுக்கம்பாறை

சொட்டுநீர் பாசனம்

கணியம்பாடி வட்டத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நெல், உளுந்து, மணிலா, சோளம், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். இதில் மணிலா, உளுந்து, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு பாசனம் செய்ய அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. இதுபோன்ற பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்பட்சத்தில் சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. 

அதன்படி இந்த ஆண்டு கணியம்பாடி வட்டாரத்தில் 435 ஏக்கர் பரப்பளவில் சொட்டு நீர் பாசன திட்டம் செயல்படுத்த வேளாண்மை துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசு ரூ.2 கோடியே 47 லட்சத்து 16 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் பயன்படுத்துவதன் மூலம் 70 சதவீத தண்ணீர் சேமிக்க முடிகிறது. 

பயன்பெறலாம்

மேலும் நீர் பாசனத்துக்கு மின்சார பயன்பாடும் குறைகிறது. இந்த திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்தினால் அதிக பயன் அடையலாம். இதில் 5 ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், 12.5 ஏக்கர் பரப்பளவு வரை உள்ள இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் அரசாங்கம் வழங்குகிறது. 

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், 2 புகைப்படம் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் கணியம்பாடி வேளாண்மை வட்டார விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

இந்த தகவலை கணியம்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்