அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருவண்ணாமாலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.;
திருவண்ணாமலை,
பஞ்சபூத தலங்களில் ஒன்றான அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. அருணாசலேஸ்வரரை காண உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
அதுமட்டுமின்றி இக்கோவிலில் விடுமுறை நாட்களிலும், விஷேச நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில் ஆயிரகணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவ விழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஆனி பிரம்மோற்சவம் நேற்று காலை சுமார் 5.30 மணியளவில் மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சாமிக்கும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், விநாயகர் உற்சவம் 5-ம் பிரகாரத்தில் நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை விநாயகர் உற்சவம் பிரகார உலா நடந்தது. இந்த விழா வருகிற வருகிற 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழா நாட்களில் காலையிலும், மாலையிலும் கோவிலின் 5-ம் பிரகாரத்தில் விநாயகர், சந்திரசேகர் வீதியுலா நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையிலான விழா குழுவினர் செய்து வருகின்றனர்.