செய்யாறில் கோர்ட்டு பெண் ஊழியரிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
செய்யாறில் கோர்ட்டு பெண் ஊழியரிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்யாறு,
செய்யாறு தாலுகா கீழ்புதுப்பாக்கம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் சித்ரா (வயது45). இவர் செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் தட்டச்சராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு செய்யாறு புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற தோழியின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இரவு 9 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுக் கொண்டு இருந்தார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சித்ரா ஒட்டி வந்த இரு சக்கர வாகனத்தை திடீரென வழி மறித்து சித்ராவை கீழே தள்ளிவிட்டு அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மாயமாக தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து சித்ரா செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.